முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி, அரச தலைவராகப் பணியாற்றியபோது, பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்குச் செல்ல அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் அளிக்க முன்னிலையான பின்னர், 2025 ஆகஸ்ட் 22 அன்று கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து 2025 ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதியின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர, தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டு, வழக்கை மீண்டும் ஒத்திவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.













