சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் வொஷிங்டனுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சரின் வருகை உட்பட, கலந்துரையாடல்களை நடத்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் மசாஹிரோ நோசாக்கி வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோளிட்டு வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரி பதவியேற்று 24 மணித்தியாலங்களின் பின்னர் இன்று (05) இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக செயற்பட்டுவந்த எஸ்.ஆர் ஆடிகலவும் தனது இராஜினாமாவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியை சந்தித்து இலங்கை அரசாங்கம் ஏப்ரல் 11 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் இவர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைக்கு செல்லும் அதிகாரிகள் உட்பட தொழில்நுட்பக் குழுவில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளும் எண்ணம் அமைச்சுக்கு இல்லை என ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க கடமையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.