புதிய பிரதமரின் தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் அரசாங்கத்தின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம் என வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்.
பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ராஜபக்ஷர்கள் இல்லாத அரசாங்கத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்லை என்றும் கூறினார்.
சமூக மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை தாம் முன்வைத்துள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சகல கட்சிகளும் ஒன்றிணைந்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போது மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவி வகிக்க முடியாது என்றும் அவர் நியமிக்கப்பட்டால் அரசாங்கத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம் என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார். (நன்றி கேசரி)