உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (28) காலை தெஹ்ரான் மற்றும் பல நகரங்களை குறிவைத்து அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது.
அதற்கு அமைவாக மத்திய கிழக்கில் உள்ள குறைந்தது ஐந்து அமெரிக்க இராணுவ தளங்கள் ஈரானிய ஏவுகணைகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய செய்திச் சேவையின் கூற்றுப்படி, இலக்கு வைக்கப்பட்ட தளங்களில் கட்டாரில் உள்ள அல்-உதெய்த் விமானப்படை தளம், குவைத்தில் உள்ள அல்-சல்மியா விமானப்படை தளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல்-சாஃப்ரா விமானப்படை தளம், பஹ்ரைனில் உள்ள 5 ஆவது அமெரிக்க தளம் மற்றும் ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் விமானப்படை தளம் ஆகியவை அடங்கும்.
ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் தொடர்ந்து ஒலித்து வருவதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல் அவிவ், ஆக்கிரமிக்கப்பட்ட அல்-குட்ஸ் மற்றும் பீர் ஷேவா உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ் மேலும் கூறியுள்ளது.















