சர்வதேசத்தின் பங்களிப்போடு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், அதற்கு வாக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்க் கட்சிகளின் இன்றைய சந்திப்பில் முன்வைக்கப்பட்டுள்ளதாக வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ”தமிழ் கட்சிகளிடையே இன்று இரண்டாவது சந்திப்பு நிறைவடைந்திருக்கிறது. நாடு எதிர்நோக்கியுள்ள அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தமிழ் கட்சிகள் என்ற ரீதியில் எவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொள்ள முடியும், போன்ற விடயங்களை ஆராயும் சந்திப்பாக இது அமைந்தது. இந்த சவால்களுக்கு மத்தியில் ஈழத்தமிழர்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பேசினோம்.
பொதுத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான அமைப்பு என்ற ரீதியில் நாமும் சில கருத்துக்களை முன்வைத்தோம். வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசத்தில் அரசியல் நிலைப்பாட்டை குறிக்கும் நோக்கில் வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.
வடக்கு கிழக்கில் 5 வருடத்துக்கான நிர்வாக அலகு ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமாக நிதிகள் மற்றும் நிர்வாகத்தை சுதந்திரமாக கையாள முடியும். இந்த நிலைப்பாடு எட்டப்பட்டால், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் கிடைக்குமானால் பொருளாதாரம் உள்ளிட்ட பலவற்றுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு எமது நிலைப்பாட்டை கூறியிருந்தோம்.”- என்றார்.