தற்போதைய மக்களின் போராட்டம் உணவுக்கான போராட்டம், தமிழர்களின் போராட்டம் உரிமைக்காக போராட்டம் எனவே இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதற்கான சாட்சியங்களாக அந்த மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து வருகின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில் இந்த நிகழ்வினை எவ்வாறு நினைகூர்வது. தொடர்ந்தும் அரசின் அடக்கு முறைக்கு அஞ்சி கடைப்பிடிப்பதா மாறாக நாங்கள் எழுச்சிகொண்ட மக்களாக நினைவுகூருவதா.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சாதாரன விடையமல்ல. இந்த நாளை அனைவரும் ஒன்று திரண்டு தேசிய எழுச்சிநாளாக பிரகடனப்படுத்தி நினைவுகூரவேண்டும் என்று அரசியல் கட்சி சார்ந்தவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
மக்களின் கொள்ளைக்கு மாறாக ஒவ்வொரு அரசியல் கட்சி பிரமுகர்களும் கட்சி கொள்கைகளை இங்கு வந்து பிரகடனப்படுத்துவதும் நிகழ்வுகளை ஏற்பாடுசெய்வதையும் நாங்கள் காண்கின்றோம்.
மக்கள் அசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தேசியத்தின் பெரும் சக்தியாக இந்த நாளினை நாங்கள் நினைவுகூரவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் மக்கள் எழுச்சி போராட்டம் பெரிய அளவில் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழர்களின் உரிமைபோராட்டத்தின்பால் மரணித்த மக்களின் நினைவேந்தல் என்பது ஒரு தேசிய எழுச்சி போராட்டமாக மாற்றம் பெறவேண்டும்.
பல வலிகளை சுமந்து போராடிய எமது இனம் இன்று சாதாரண நிலமைக்குள் அரசியல்வாதிகளால் கொண்டு செல்லப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம். தென்னிலங்கையில் சிங்கள மக்கள் முன்னெடுத்து வரும் மக்கள் போராட்டம் அது ஒரு உணவுக்கான போராட்டம், எங்கள் போராட்டம் வயிற்று பசியினையும் பார்க்காது அதனையும் தாண்டி உரிமைபசிக்கான போராட்டம். இரண்டு போராட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.