பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எதிர்ப்பு தெரிவித்ததுடன், பணத்தை வீண் விரயம் செய்யாமல் இணக்கப்பாட்டுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.
தேர்தலை நடத்துவதற்கு சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்மொழியப்பட்டன.
அதன்படி, ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததோடு, அஜித் ராஜபக்ஷவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்தார்.
இதனையடுத்து, வாக்கெடுப்பு இடம்பெறவிருந்த நிலையில், பணம் மற்றும் நேரத்தை வீணடிப்பதை விடுத்து, வாக்கெடுப்புக்கு செல்லாமல் ஒருவரை தெரிவு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்தனர்.
எவ்வாறிருப்பினும் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென சபாநாயகர் தெரிவித்ததையடுத்து, தற்போது வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது.