19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடுகையில் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் மிகவும் பின்னடைவானது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ஆகவே 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதி வடிவம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தம் முன்னேற்றத்தை காண்பிக்கும் நிலையில் இந்த 21 ஆவது திருத்தம் அதனை விட பின்னடைவான திருத்தமாகவே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக ஜனாதிபதியினால் அமைச்சுப் பதவிகளை வகிக்கமுடியாது என 19 ஆவது திருத்தம் கூறுகின்ற போதிலும், 21 ல் அவர் அமைச்சுப் பதவிகளை வகிக்க இடமளிக்கப்பட்டிருக்கின்றது என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அத்தோடு முதலில் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப் படுத்திவிட்டு, பின்னர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்துக் கவனம் செலுத்தலாம் என கூறப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் குறிப்பிட்டார்.
இரண்டு விடயத்தையும் தனித்தனியாகச் செய்யவேண்டும் என்று கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்பதனால் தாமதமின்றி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாது ஒழிக்க வேண்டும் என்றும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.