கச்சைதீவை மீளப்பெறுவதன் காரணமாக எங்களுடைய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண அவைத்தலைவர் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள போதே இவ்விடயத்தை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், கச்சதீவு மீட்பு தொடர்பாக தமிழக மீனவர் சார்ந்த கருத்தை தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்ராலின் தெரிவித்தற்கு தேசிய ரீதியாக அண்ணாமலையும் ஆதரித்து இருந்தார். ஆனால் உண்மையான நிலை எனனவென்றால் ஸ்டாலினை பொறுத்தவரையில் உலகத் தமிழர்களின் தலைவராக நாம் பார்க்கின்றோம். உலகத் தமிழர்களாக பார்க்கின்ற பொழுது இலங்கைத் தமிழர்களும் ஒன்றுதான் இந்தியா தமிழர்களும் ஒன்றுதான்.
தமிழக மீனவர்களை தவிர நம் நாட்டினுடைய தெற்குப்பகுதி மீனவர்களுடைய பாதிப்பும் எங்களுடைய வடக்கு மீனவர்களுக்கு இருக்கின்றது.
மட்டக்களப்பிலிருந்து முல்லைத்தீவு வரையான கடற்பரப்பில் சிங்கள மீனவர்கள் எங்களுடைய வளங்களை சுரண்டிக் கொண்டு செல்கின்றார்கள்.
இதனால் எங்களுடைய தமிழ் மீனவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள். இதன்காரணமாக சுயாதீனமாக நம்மவர்கள் கடற்தொழில் மேற்கொள்வதற்கு நெடுந்தீவு பகுதி கச்சதீவு பகுதிகளே களமாக இருக்கின்றது. இவ்வாறான நிலையில் கச்சதீவை மீளப்பெறுவது என்பது எங்களுடைய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் ஸ்டாலினிடம் தெரிவிக்கிறேன் என்றார்.