உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதிவொலோடிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
லக்ஸம்பர்க் நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், ‘நாங்கள் எப்படி இருக்கிறோமோ, அப்படியே இருக்க விரும்புகிறோம்’ என்பதுதான் லக்ஸம்பர்கின் தேசிய கோஷமாகும். தற்போது நாங்கள் ரஷ்யாவுடன் போரிட்டு வருவதும் அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து சுமார் 100 நாள்கள் ஆகின்றன. இந்த 100 நாட்களில் நாங்கள் 30,000 வீரர்களை இழந்துள்ளோம். இருந்தாலும், இந்தப் போரை தொடர்ந்து நடத்த ரஷ்யா விரும்புகிறது. காரணம், ஒரு தனி நபர் (ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்) நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே இருக்கவேண்டும் என்பதை விரும்பவில்லை.
தற்போது உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்பட 1.25 இலட்சம் கிலோ மீட்டர் பரப்பளவு ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் உக்ரைன் மீது குண்டுமழை பொழியப்படுகிறது. புதன்கிழமை மட்டும் ரஷ்யா எங்கள் மீது 15 ஏவுகணைகளை வீசியது. கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை 2,478 ரஷ்ய ஏவுகணைகள் பெரும்பாலும் பொதுமக்கள் பகுதிகளில் வீசப்பட்டுள்ளன.
இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போர் முனையின் நீளம் 1,000 கி.மீ. தொலைவுக்கு விரிந்துள்ளது.
இதுவரை இந்தப் போரால் 1.2 கோடி பேர் உக்ரைனியர்கள் அகதிகளாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் அடங்கிய 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உக்ரைனைவிட்டு வெளியேறிவிட்டனர்.
உக்ரைன் மீது தொடுத்துள்ள போரால் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதுவரை இந்தப் போரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை, 1979-89 ஆப்கன் போரில் உயிரிழந்த சோவியத் வீரர்கள் மற்றும் 1994-2000-ஆம் ஆண்டின் 2 செசன்ய போர்களில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைவிட அதிகமாகும்.
லக்ஸம்பர்க் பிரதமர் ஜேவியர் பேட்டல் கீவ் நகருக்கு வருகை தர வேண்டும். உக்ரைக்கு உங்கள் நாடு அளித்து வரும் உதவிகளுக்கு நன்றிகள்’ என கூறினார்.