கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை கொடியேற்றதுடன் ஆரம்பமாகியுள்ளது.
கொடியேற்றத்தை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான நவநாள் வழிபாடுகள் இடம்பெறும்.
இதையடுத்து எதிர்வரும் 12 திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமயில் வெஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்படும்.
கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் திருவிழா திருப்பலிகள் திருவிழா தினமான இம்மாதம் 13 ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும், 5 மணிக்கும் சிங்கள மொழியிலும், 6 மணிக்கு ஆங்கில மொழியிலும் ஒப்புக்கொடுக்கப்படும்.
திருவிழா பாடல் திருப்பலிகள் அன்றைய தினம் காலை 8 மணிக்கு தமிழ் மொழியிலும், காலை 10 மணிக்கு சிங்கள மொழியிலும், நண்பகல் 12 மணிக்கு ஆங்கில மொழியிலும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
இதன் பின்னர் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இடம்பெற்று, இரவு 8 மணியளவில் நற்கருணை ஆசீர்வாதமும் புனித அந்தோனியாரின் ஆசீர்வாதமும் வழங்கப்படும்.
ஈஸ்டர் தாக்குதல்- கொரோனா பெருந்தொற்று போன்ற காரணங்களினால் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து வந்த கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இம்முறை நடத்தப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.