நெதர்லாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
ஆம்ஸ்டெல்வீன் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்துக் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்துக் கிரிக்கெட் அணி, 48.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, எட்வட்ஸ் 68 ஓட்டங்களையும் மெக்ஸ் ஓடோவ்ட் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும் அல்சார்ரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் ஆண்டர்சன் பிலீப், ஹெய்டன் வோல்ஸ் மற்றும் போனர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 215 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 45.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, பிரெண்டன் கிங் ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களையும் கார்டி ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நெதர்லாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பாஸ் டி லீடே 2 விக்கெட்டுகளையும் லோகன் வென் பீக், ஆர்யன் டுத் மற்றும் செரீஸ் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 90 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 9 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பிரெண்டன் கிங் தெரிவுசெய்யப்பட்டார்.