பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வீடமைப்புத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், தேசிய வீடமைப்பு வங்கி 70 மில்லியன் பவுண்டுகள் வரை புதிய முதலீட்டை அறிவித்துள்ளது.
ஃபியெரா ரியல் எஸ்டேட் (Fiera Real Estate) மற்றும் பேக்கஜ்ட் லிவிங் (Packaged Living) நிறுவனங்கள் இணைந்து முன்னெடுக்கும் குடும்ப வாடகை வீடமைப்புத் திட்டத்திற்கே இந்த நிதி ஒதுக்கப்படவுள்ளது.
FRESH எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முதலீட்டுத் திட்டத்தின் ஊடாக, பிரித்தானியாவின் வீடமைப்புத் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் புதிய குடும்ப வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்காக, வீடமைப்பு அபிவிருத்தியாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து புதிய வீடுகளை உருவாக்குவதற்கான நிதி ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தேசிய வீடமைப்பு வங்கியின் ஆரம்பகட்ட முதலீடாக 51 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், திட்டம் விரிவடையும் நிலையில் மேலும் 19 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்பையும் சேர்த்து, இந்தத் திட்டத்தின் மொத்த முதலீட்டுத் திறன் 200 மில்லியன் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.



















