பிரித்தானியாவில் குடியேற்ற விதிகள் தொடர்பான தனது முந்தைய திட்டத்தில் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் திடீர் மாற்றத்தை அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு பராமரிப்புப் பணியாளர்கள் நிரந்தர வதிவிட உரிமையைப் பெறுவதற்கு 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என முன்னர் முன்மொழியப்பட்டிருந்தது.
எனினும், புதிய அறிவிப்பின்படி, விசா நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து, ஆண்டுக்கு குறைந்தது 25 ஆயிரம் பவுண்டுகள் சம்பாதிக்கும் பராமரிப்புப் பணியாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.
குறிப்பாக, 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை பிரித்தானியாவுக்கு வந்த பராமரிப்புப் பணியாளர்களில் சுமார் 75 சதவீதமானோர் இந்தச் சலுகையைப் பெறத் தகுதி உடையவர்களாக இருப்பார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தகுதிகளைப் பூர்த்தி செய்யாத ஏனைய பணியாளர்களுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கான புதிய பராமரிப்பு விசாவுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
மேலும், சுரண்டல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களின் கீழ் பணியாற்றியவர்கள், பழைய நிறுவனத்துடன் கட்டுப்பட்டிருக்காமல் வேறு முறையான நிறுவனங்களில் வேலை தேடுவதற்கும் வழிவகை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம், தொழிலாளர் துறையினர் மற்றும் ஆளும் தொழிலாளர் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடமிருந்து எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரித்தானியாவில் பெரும்பாலான குடியேறிகள் நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கான வழக்கமான காத்திருப்புக் காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது.
ஆண்டுக்கு 50 ஆயிரத்து 271 பவுண்டுகளுக்கு மேல் சம்பாதிப்பவர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சில பொதுச் சேவைப் பணியாளர்கள் ஐந்து ஆண்டுகளில் விண்ணப்பிக்க முடியும்.
அதேவேளை, அதிக வருமானம் ஈட்டும் சிலர் மூன்று ஆண்டுகளிலேயே நிரந்தர வதிவிட உரிமையைப் பெறுவதற்கான வாய்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வரும் சில அகதிகள், சூழ்நிலையைப் பொறுத்து 20 முதல் 30 ஆண்டுகள் வரை நிரந்தர வதிவிட உரிமைக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய குடியேற்றக் கொள்கை 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய அரசின் இந்த மாற்றம் அரசியல் மற்றும் குடியேற்றத் துறைகளில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

















