டப்ளின் விமான நிலையத்தில் ரையன்ஏர் (Ryanair) விமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தன்னிடம் இனவெறித் தொனியில் பேசியதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் விமானத்தில் ஏற அனுமதிக்கப் போவதில்லை என மிரட்டியதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், விசா ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தான் மறுத்ததாக விமான நிறுவனம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.
தனது 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக டப்ளினுக்குச் சென்றிருந்த சங்கக்கார, இரண்டு நாள் பயணத்தின் பின்னர் தனது குடும்பத்தினருடன் பிரிஸ்டலுக்குத் திரும்பியபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கை கடவுச்சீட்டுகளுடன் இணைக்கப்பட்ட மின்னணு விசாக்கள் (e-Visa) தொடர்பில் விமான நிலையத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் விசா பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள், விமானத்தில் ஏறும் நுழைவாயிலில் (Boarding Gate) ஆவணங்களை மீண்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என ஏற்கனவே தன்னிடம் உறுதியளித்திருந்ததாக சங்கக்கார தெரிவித்துள்ளார்.
எனினும், ரையன்ஏர் ஊழியர் ஒருவர் தன்னிடம் மின்னணு விசாக்களை அணுகுமாறு கோரியதுடன், விரைவாகச் செயற்படுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக மேலதிக நேரம் கோரியதுடன், குறித்த ஊழியரின் பேச்சு முறையையும் தான் கேள்விக்குட்படுத்தியபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ‘டெய்லி மெயில் ஸ்போர்ட்’ (Daily Mail Sport) ஊடகத்திடம் கருத்து வெளியிட்ட அவர், குறித்த ஊழியர் தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஏனைய பயணிகளுக்கு ஆபத்தானவர்களாகக் கருதி, விமானத்தில் ஏற அனுமதிக்கப் போவதில்லை என மிரட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தன்னிடம் இருந்த கடவுச்சீட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, “உங்களிடம் உள்ளதைப் போன்ற கடவுச்சீட்டுகளைக் கொண்ட நீங்கள் இதை எதிர்பார்க்க வேண்டும்” என அந்த ஊழியர் கூறியதாகவும் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தைத் தனது மனைவி யெஹாலி எதிர்த்ததாகவும், குறித்த பேச்சை இனவெறித் தொனியிலான கருத்தாகத் தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, டப்ளினில் ரையன்ஏர் ஊழியரைத் தவிர ஏனைய அனைவரும் தங்களிடம் அன்பாக நடந்துகொண்டதாக யெஹாலி தெரிவித்துள்ளார்.
இறுதியில், சங்கக்காரவும் அவரது குடும்பத்தினரும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்ட போதிலும், சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ய விரும்பியபோது குறித்த ஊழியர் தனது பெயரைத் தெரிவிக்க மறுத்ததாகவும், தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் சங்கக்கார குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு முன்னதாக, கட்டாயக் குடிவரவு ஆவணச் சரிபார்ப்பின்போது சங்கக்கார தேவையான விசா ஆவணங்களைச் சமர்ப்பிக்க மறுத்ததாக ரையன்ஏர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
குறித்த ஆவணச் சரிபார்ப்புகள் நிறைவடைந்து, அவர் பயணம் செய்வதற்கான தகுதி உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி டப்ளினிலிருந்து பிரிஸ்டலுக்கான விமானத்தில் அவர் பயணித்ததாகவும் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
எனினும், இந்த விளக்கத்தை நிராகரித்துள்ள சங்கக்கார, விசா ஆவணங்களைக் காண்பிக்கத் தான் ஒருபோதும் மறுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் சுமார் 2,000 சொற்களைக் கொண்ட விரிவான முறைப்பாட்டை ரையன்ஏர் நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














