இலங்கைக்கு வந்தபோது தான் எதிர்பார்த்த இரண்டு விடயங்களும் நிறைவேறியதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் தகுதியான எவரேனும் தனது இடத்திற்கு வரத் தயார் எனில் கட்சி அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜினாமா கடிதத்தை கையளித்ததன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “என்னால் முடிந்தவரை நான் செய்ய வேண்டியதை செய்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் மக்கள் எதிர்பார்த்ததை எல்லாம் செய்ய முடியவில்லை.
இலங்கைக்கு வந்தபோது நான் இரண்டு விடங்களை எதிர்பார்த்து வந்தேன். அந்த நேரத்தில் என் மீது இரண்டு பெரிய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தன
அதாவது 2015 ஆம் ஆண்டு நான் பல்வேறு ஊழல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. பல வருடங்களின் பின்னர் கடந்த வாரம் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டேன்.
அந்த வழக்குகளை எதிர்கொள்வதே எனது முதல் எதிர்பார்ப்பாக இருந்தது.
இரண்டாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு நான் பொறுப்பேற்க விரும்பினேன். அவரது தலைமையின் கீழ் அவருக்கு வெற்றியை வழங்க விரும்பினேன். அந்த இரண்டு எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்பட்டன.
அதைத் தவிர, நிதியமைச்சர் பதவி கிடைக்கும், நாடாளுமன்றத்துக்கு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததில்லை. அவ்வளவுதான்.
தனிப்பட்ட ரீதியில் 21 ஆம் திருத்தத்தை நான் முழுமையாக எதிர்க்கின்றேன். 21 குறித்து அரசாங்கம் எடுக்கும் தீர்மானத்துடன் இணங்க முடியாது என்பதை முன்னரே உணர்ந்ததாலேயே பதவி துறந்தேன்.என்னை இலக்காகக் கொண்டே 21 கொண்டு வரப்பட்டுள்ளது.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். எனினும் இது தொடர்பில் கட்சி ரீதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை.
நாளை என்றாலும்கூட எந்தவொரு தேர்தலுக்கும் பொதுஜன பெரமுன தயார்.
எம்மவர்களுக்கு அதிகாரத்தை வழங்கி நாடு இந்நிலைமையை அடைந்தமைக்கு மக்களும் ஒருவிதத்தில் பொறுப்பு கூற வேண்டும்.” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.