எரிபொருள், சீமெந்து, உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு அனுமதித்தால் ஒரு இரவிலேயே தீர்வு என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
”கடற்தொழிலாளர்கள், விவசாயிகள், போக்குவரத்து உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கேட்டுள்ளார்கள். வட மாகாணத்தில் இருக்கக்கூடிய உரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை அதேபோன்று அத்தியாவசிய பொருட்களினுடைய பற்றாக்குறை நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அதே நேரத்தில் வடமாகாணமும் அதற்கு விதிவிலக்கில்லாமலர் அதற்கு முகம் கொடுத்த வருகின்றது.
இந்த வகையில் எங்களது நீண்டகால திட்ட முன்மொழிவாக இந்தியாவிலிருந்த பொருட்களை இறக்குமதி செய்வதாகும். பாண்டிச்சேரி, காரைக்கால் அல்லது நாகபட்டணத்திலிருந்து நேரடியாக காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்குமதி செய்வதன் ஊடாக விரைவாகவும், நியாயமான முறையில் எமது மக்களிற்கு கிடைக்கக்கூடிய சூழலை உருவாக்குவோம்.
எரிபொருள், உரம், சீமெந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை நீக்கி வெகு விரைவில் மக்களிற்கு அது கிடைக்க செய்வோம். என தெரிவித்தார்.
சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு நாட்கள் கடந்துள்ள நிலையில் பசளைகள் கிடைக்கவில்லை. இந்த காலப்பகுதியில் பசளையை பெற்றுக்கொடுக்க முடியுமா என ஊடகவியலாளர் வினவினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர்,
அது தொடர்பில் என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் எனக்கு குறித்த அனுமதி கிடைக்கின்ற பட்சத்தில் ஒரு இரவிலேயே அதனை கொண்டுவந்து சேர்த்து விடுவேன் என தெரிவித்தார்.