“ராஜபக்ஷக்களின் கைக்கூலியான ரணிலை விரட்டியடிப்போம்”என்ற தொனிப் பொருளில் ஹட்டனில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் என பெருமளவானோர் பங்கேற்றனர்.
ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று ( செவ்வாய்க்கிழமை) மதியம் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இடைநிறுத்தாது முடிவுகட்டுவோம் மக்களை வெற்றிபெறச் செய்வோம், இடைநிறுத்தாது நிறைவுசெய்வோம் திருடர்களை விரட்டியடிப்போம், ராஜபக்ஷக்களின் கைக்கூலியான ரணிலை விரட்டியடிப்போம் என்ற பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும், மீண்டும் ஜனாதிபதியாக வர கூடாது என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியதுடன், அவ்வாறு இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்தனர்.
அத்துடன், கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெறும் போராட்டத்துக்கு தமது முழு ஆதரவையும், மலையக மக்கள் சார்பில் வெளிப்படுத்தினர்.