இளவாலை மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் உள்ள கடைகளில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களைக் கொடுத்து ஏமாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை பன்னாலையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை மற்றும் இளவாலை பொலிஸ் பிரிவுகளில் உள்ள கடைகளுக்கு அண்மைய நாட்களில் சென்ற ஒருவர் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை வழங்கி பொருள்களை வாங்கிவிட்டு மிகுதிப் பணத்தை பெற்றுச் சென்றுள்ளார்.
போலி நாணயத்தாள்கள் என அறிந்த கடைக்காரர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாடுகள் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். சந்தேக நபரை வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, நல்லூர் ஆலய சூழலில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை பயன்படுத்திய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். எனவே பலர் இவ்வாறான மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.