சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு வந்துள்ள போதிலும் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்காது என துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 600 மைல் தூரத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருவதற்காக அனுமதியை அவர்கள் கோரவில்லை என துறைமுக அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சிக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் இந்த முடிவை மாற்றியமைக்கும் வரை அந்த கப்பல் அங்கேயே வட்டமிடும் என இந்திய ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டன.
எவ்வாறாயினும் இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்தைகளை தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் அவசர சந்திப்பிற்கு சீன தூதரகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.