வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டுதலில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினராக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தர சர்மா கலந்து கொண்டதோடு, பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன் போது ஆரம்ப நிகழ்வாக திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மாவட்டச் செயலக பிரதான வீதியூடாக திருவள்ளுவர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம் பெற்றன.
திருக்குரள் நடனம், சிறப்பு சொற்பொழிவு, குறள் வழி நாடகம், திருவள்ளுவர் புகழ் பாடும் கோலாட்டம், சிறப்புக் கவியரங்கம், ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.