இந்தியாவை அனுசரித்து செல்லும் அணுகுமுறையை இலங்கை பின்பற்ற வேண்டும் என்றும் ஆளுநர்கள் நியமனத்தைவிட மாகாண ஆட்சியை நிறுவுவதற்கான நகர்வுகள் சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஆளுநர் நியமனம் சம்பந்தமாக ஐக்கிய தேசியக்கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலையில், ஆளுநர் நியமனங்களைவிட, மாகாணத்தில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக மாகாணங்களுக்கான அதிகாரம் என்பது ஆளுநர் ஊடாக அல்லாமல், மக்கள் ஊடாக தெரிவுசெய்யப்படும் முதல்வர் ஊடாகவே கையாளப்பட வேண்டும்.
அதிகாரங்களை முழுமையாக பகிரும் வகையில் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக வேண்டும்.
13 ஆவது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்தாமல் இழுத்தடிக்கும் இலங்கை, தற்போது சீன கப்பலையும் நாட்டுக்குள் அனுமதித்துள்ளது.
எது எப்படி இருந்தாலும் இந்தியாவை அனுசரித்து செல்லும் அணுகுமுறையையே இலங்கை பின்பற்ற வேண்டும் – என்றார்.