மீன் வளம் மற்றும் கடல் வளங்களை அழிக்கும் காற்றாலை மின்செயற்திட்டத்தை மன்னார் தீவக பகுதிக்குள் மேற்கொள்ள வேண்டாம் என கோரி பேசாலை பொது மக்கள் நேற்று போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
பேசாலை நகர் பகுதியிலேயே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது, மக்களின் தொடர் எதிர்ப்புக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக கணிய மண் அகழ்வு மற்று ஆய்வு பணிகள் சட்டவிரோதமாக இடம் பெறுவதாகவும் பொது மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.
இவை தொடர்பாக பதாதைகளை ஏந்தியும் கோஷமெழுப்பியுமே பொது மக்கள் தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
குறித்த போராட்டத்தின் பின்னர் பொது மகஜர் பொது மக்களுக்கு வாசிக்கப்பட்டு, எதிர்ப்புப் பேரணியொன்றும் மன்னார் பிரதேச சபைவரை இடம்பெற்றது.
இங்கு குறித்த மகஜரை கையளிக்கப்படவிருந்த நிலையில், இதனை பெற்று கொள்ள சபையின் தவிசாளர் பிரதேச சபையில் இல்லாத காரணத்தினால் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்ற நிலைமையும் ஏற்பட்டது.
பேசாலை பகுதியில் இடம் பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கு காற்றாலை செய்ற்திட்டத்திற்கு முழு பொறுப்பும் மன்னார் பிரதேச சபை தான் ஏற்க வேண்டும் எனவும் மகஜரை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய மன்னார் பிரதேச சபை தவிசாளர் இஸ்ஸதீன் ஓடி ஒளிந்து விட்டதாகவும் போராட்டத்தில் ஈட்பட்ட மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
தொடர்சியாக காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக பிரதேச சபைக்கு முன்பாக கேஷங்களை எழுப்பிய பொது மக்கள் பிரதேச சபை தவிசாளர் இல்லாத நிலையில் உப தவிசாளரிடமோ, செயலாளரிடமோ மகஜரை கையளிக்க விரும்பவில்லை என தெரிவித்து கலைந்து சென்றனர்.
மன்னார் போசாலை பகுதியில் முழுவதும் கடைகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.