நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியா – தலவாக்கலையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் அரசியல் கைதிகள் 20 தொடக்கம் 25 ஆண்டுகள் தடுப்பு காவலிலேயே கழித்து வருகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் எண்ணம் தற்போதைய ரணில் அரசாங்கத்திற்கு மாத்திரமல்லாமல், கடந்த காலத்தில் இருந்த எந்தவொரு அரசாங்கத்திற்கும் இருக்கவில்லை.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ஒவ்வொரு அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கின்ற போதிலும் அதனை ஒருபோதும் நிறைவேற்றியதில்லை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமல்லாமல், கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதிகள் பொதுமன்னிப்பின் கீழ் சிலரை விடுதலை செய்துள்ளனர்.
இவ்வாறு இருக்கையில், ஏன் நீண்டகாலம் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அல்லது போராளிகளை விடுவிக்க முடியாது?
அதேநேரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி எந்தவொரு அமைச்சு பதவிகளையும் பெற்றுக்கொள்ளாது.
வரவு – செலவுத் திட்டம் நாடடு மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் இருக்கும் பட்சத்தில் அதனை ஆதரிப்போம்.
மலையக மக்கள் உட்பட நாட்டு மக்களுக்கு குறித்த வரவு – செலவுத் திட்டம் பாதமாக அமையும் பட்சத்தில் அதனை எதிர்க்கவும் தயங்க மாட்டோம்.
குறிப்பாக மலையக மக்களின் சம்பளம், காணி மற்றும் வீட்டு வசதிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மலையக மக்களுக்காக 6800 வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட போதிலும் தற்போதைய ஆட்சியில் வெறும் 582 வீடுகள் மாத்திரமே அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.
நாட்டிலுள்ள மாணவர்கள் உட்பட பெரும்பாலான மக்கள் போஷாக்கு இன்றிய உணவுகளையே உட்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
இதுமிகவும் மோசமான நிலைமையாகும்.
பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரை இந்த நிலைமை மேலும் மிகவும் மோசமாக உள்ளது.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக தெரிவித்து பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளை பெற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க. தற்போது தனது கட்சியை பலப்படுத்தும் மற்றும் வளர்க்கும் செயற்பாடுகளிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பதை விட மக்களின் போஷாக்கு மற்றும் விலைவாசி பிரச்சினைகளை தீர்ப்பதே மிகவும் முக்கியமானது.- என்றார்.