இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுவிக்க வலியுறுத்தி, இன்று திங்கட்கிழமை காலை அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை சுமார் 300 இக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1800 இக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர்.
கச்சத்தீவு மற்றும் நெடுந்திருக்கும் இடையே மன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 1 விசைப்படகையும் அதிலிருந்து 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
இந்நிலையில் இராமேஸ்வரம் மீனவர்களின் கைது நடவடிக்கை கண்டித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி டோக்கன் அலுவலகம் முன்பாக மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மீனவர்கள் முன்னிலையில் பல்வேறு பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர்களையும் மீனவர்களின் விசைப்படகையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
அத்தோடு, இந்திய – இலங்கையின் மீனவர்களின் பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இன்று திங்கட்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
அதற்கிணங்க இன்று இராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800 இக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தற்போது நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய மத்திய, மாநில அரசாங்கங்கள் இலங்கை அரசாங்கத்துடன் பேசி மீனவர்களையும் இலங்கையில் உள்ள படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.