கடற்படையினர் மீனவர்களை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியதெனவும், எரிபொருள் பெற்றுக்கொடுக்க அமைச்சர் மற்றும் தமிழ் மக்கள் பிரிதிநிதிகள் ஆர்வம் காட்டாமை தொடர்பிலும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் விசனம் வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்ட பிரதிநிதிகள் குறிப்பிடுகையில்,
அண்மையில், கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெபெற்று இன்று வீடு திரும்பியுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்தை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது. போதைப்பொருட்களை கட்டப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காத கடற்படையினர், இவ்வாறு அப்பாவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றமையானது கண்டனத்துக்குரியது.
இன்று நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்களுக்கான மண்ணெண்ணை போதுமான அளவு கிடைக்கவில்லை. இந்த நிலையிலும், சில மீனவர்கள் தமது தொழிலை சிரமத்தின் மத்தியில் முன்னெடுத்த வருகின்றனர்.
இந்த நிலையில், கடற்படையினர் இவ்வாறு அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியமையானது பொருத்தமற்றதென்பதுடன், கண்டனத்துக்குரியது.
இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாத வகையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தாக்கிய கடற்படையினர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். மீனவர்கள் மீது தவறுகள் இருப்பின் உரிய விசாரணைகள் மூலம் அது கண்டறியப்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறக்கூடாது.
எமது நாட்டின் பொருளாதாரத்தை விவசாயமும், கடல் தொழிலுமே பெரும்பாலும் தாங்குகின்றது. இந்த இரண்டுக்கும் மண்ணெண்ணை பெற்றக்கொடுக்கப்படவில்லை. அதற்கு கடற்தொழில் அமைச்சரும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் அக்கறை செலுத்தவில்லை.
இந்த விடயமும் வருத்தத்தை ஏற்படுத்துவதும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காத அமைச்சர் மற்றும் தமிழ் மக்கள் பிரிதிநிதிகளின் செயற்பாட்டினையும் நாங்கள் கண்டிக்கின்றோம்.
விவசாயத்திற்கும், கடற்தொழிலுக்கும் வேண்டிய எரிபொருளை பெற்று கொடுக்க வேண்டும்.
அத்துமீறிய மீன்பிடி, மீனவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடராது இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடரபில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – என அவர்கள் தெரிவித்துள்ளனர்.