தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் (சனிக்கிழமை) களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ராஜித்த சேனாரத்ன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, சர்வமதத் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இரா.சாணக்கியன் இவ்வாறு விசனம் வெளியிட்டுள்ளார்.
சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதானது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.