வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் தொடர்ந்து பல வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டிலில் முதன்மை சந்தேக நபர் ஒருவரும் , அவருக்கு உதவியவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பர்மலையைச் சேர்ந்த 25 வயதுடைய முதன்மை சந்தேக நபர் ஒருவரும் அவருக்கு உதவிய உடுப்பிட்டியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருமே கைது செய்யப்பட்டவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து 11 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் உருக்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.
வல்வெட்டித்துறை பகுதியில் தொடர்ச்சியாக பூட்டியிருக்கும் வீடுகளில் பகல் வேளைகளில் உடைத்து நகைகள் திருடப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில், பருத்தித்துறை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் திருடப்பட்ட நகைகள் உருக்கிய நிலையில கைப்பற்றப்பட்டது.
அதனை அடுத்து நகைக்கடை உரிமையாளரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் வழங்கிய தகவலின் பிரகாரம் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
முதன்மை சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் திருட்டு நகைகளை வங்கியில் அடகு வைத்து உடந்தையாக இருந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார்.