எனது பதிவின் மூலம் சம்மந்தனின் சிறப்புரிமை மீறப்பட்டமைக்காக மன்னிப்பினைக் கோருகின்றேன் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் யோகராஜா சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பில் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்மந்தன் அவர்கள் கடந்த 19.07.2021 அன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தமையினை வீடியோவாக முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்திருந்தேன்.
குறித்த முகப் புத்தக பதிவு தொடர்பில் 06.08.2021 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தனது நாடாளுமன்ற உரையில் எனது முகநூல் பதிவினூடாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன் அவர்களுடைய சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் குறித்த பதிவு தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இவ்விடயம் தொடர்பில் விசாரணைக்காக கடந்த 04.10.2022 அன்று நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டு நாடாளுமன்றஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைக் குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தேன்.
நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைக் குழுவின் தவிசாளர் விஜயதாச ராஜபக்ச முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் என்னுடைய முகப்புத்தகப் பதிவில் வெளியிடப்பட்ட வீடியோ மூலம் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமை மற்றும் அதை மீறுவோருக்கான சட்ட ஏற்ப்பாடுகள் குறித்து குழுவின் தவிசாளர் விஜயதாச ராஜபக்ச எனக்கு தெளிவுபடுத்தியிருந்தார். சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமையினை ஏற்றுக்கொண்ட நான் அதற்கு மன்னிப்பும் கோரியிருந்தேன்.
நான் ஒரு கட்சியின் உறுப்பினர் என்கின்ற ரீதியில் அரசியல் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் சம்மந்தன் அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தரும்போது கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்டமையினை சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இளையவர் ஒருவருக்கு வழங்கலாம் எனவும், எனது கருத்தை பதிவு செய்திருந்தேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பிலும் அது தொடர்பான சட்ட ஏற்ப்பாடுகள் தொடர்பிலும் எனக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் தெளிவு இல்லை. பாராளுமன்றத்தில் வீடியோ எடுக்கப்பட்டது இது முதல் தடவையல்ல பல தடவைகள் இவ்வாறு வீடியோக்கள் எடுக்ககப்பட்டுள்ளன.
உதாரணமாக நாடாளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்ட சம்பவத்திதை வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டன. அப்போது வீடியோ பதிவு செய்தவருக்கு எதிராக இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பபட்டிருந்தால் ஊடகங்கள் வாயிலாக எனக்கும் தெளிவு கிடைத்திருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பில் போதிய தெளிவின்மையினால் குறித்த வீடியோவை பதிவு செய்தமைக்காக மன்னிப்பையும் கோரியிருந்தேன்.
பின்னர் இருசாராரும் இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தோம். எனது பதிவின் மூலம் சம்மந்தனின் சிறப்புரிமை மீறப்பட்டமைக்காக ஊடகங்கள் வாயிலாகவும் மன்னிப்பினைக் கோருகின்றேன்.
என்னுடைய எழுத்துக்கள் இவர்களுடைய அரசியல் நகர்வுகளுக்கு பெரும் சவாலாக இருப்பதனால் எனது குரலை நசுக்குவதற்காக எடுக்கும் முயற்சியே இது. தொடர்ச்சியாக நான் அச்சுறுத்தப்பட்டு வருகின்றேன். தேர்தல் முடிவுற்று மூன்று மாதங்களின் பின்னர் மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் என்னை சந்தித்திருந்தார் “நீங்கள் எனக்கு எதிராக அதிகமாக எழுதுகின்றீர்கள் உங்களுக்கு குடும்பம் பிள்ளைகள் இருக்கு பார்த்து நடந்துகொள்ளுங்கள்” என மிரட்டும் தொணியில் கூறிவிட்டுச் சென்றார்.
அதன் பின்னர் பல ஊடகவியலாளர் சந்திப்புக்களில் எனது பெயரைக் குறிப்பிடாமல் முகப்புத்தகத்தில் ஒருவர் ஊடகவியலாளர் என்று சொல்லிக்கொண்டு எனக்கு எதிராக செயற்படுகின்றார் என குறிப்பிட்டிருந்தார்.
தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் தங்களுக்கு ஆதரவாக செயற்படாத ஊடகவியலாளர்களையும், தங்களுக்கு எதிராக செயற்படுபவர்களையும் அடக்கும் செயற்பாடுகளை தொடந்தும் முன்னெடுத்து வருகின்றனர் ஊடக சுதந்திரம், ஊடக அடக்குமுறை கருத்துச் சுதந்திரம் என மேடைக்கு மேடை பேசும் இவர்கள் தற்போது கருத்து சுதந்திரத்தினை அடக்க முற்ப்படுகின்றனர்.
சிறப்புரிமை என்பது நாடாளுமன்ற உறுப்பினர் சம்மந்தனுக்கு மட்டுமானது அல்ல ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உண்டு.
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் பல உறுப்பினர்கள் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை மிகக் கீழ்த்தரமாக விமர்சித்துவருகின்றனர் பாதிக்கப்படுகின்ற உறுப்பினர்கள் சிறப்புரிமையினை மீறி விமர்சித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். நாடாளுமன்ற சிறப்புரிமை மற்றும் அது தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.