மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்ட மகிழூர் கண்ணகிபுரம் பகுதியில் (வியாழக்கிழமை) கிராமத்திற்குப் புகுந்த இராட்சத முதலை ஒன்றை வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதி மக்களின் உதவியுடன் மடக்கிப்பிடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
மட்டக்களப்பு வாவியிலும், அதனை அண்டிய சிறு குளங்களிலும் முதலலைகளின் அட்டகாசங்களும், தாக்குதல்களும், மீனவர்களையும், குளத்தில் மேச்சலுக்குச் செல்லும் கால்நடைகளையும் தாக்கிவரும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.
இந்நிலையில் வியாழக்கிழமை அப்பகுதியிலுள்ள குளத்திலிருந்து கிராமத்திற்கு முதலை ஒன்று புகுந்துள்ளது. இதுகுறித்து வன ஜீவராசிகள் பாதுகாப்பு காரியாலயத்திற்கு அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
உடன் ஸ்த்தலத்திற்கு விரைந்த அப்பகுதி வன ஜீவராசிகள் பாதுகாப்பு பொறுப்பதிகாரி ப.ஜெகதீஸ்வரன், மற்றும் வன உத்தியோகஸ்த்தர்களான வி.ஜெயசாந், எஸ்சிறிதரன், என்.நதீஸ், உள்ளிட்ட குழுவினர் அப்பகுதி மக்களின் உதவியுடள் முதலையை மடக்கிப் பிடித்துள்ளனர்.
சுமார் 8 அடி நீளமுள்ள இராட்சத முதலை ஒன்றை கிராமத்தினுள் இருந்து தமது குழுவினர் மடக்கிப் பிடித்துள்ளோம். இதனை தாம் ஏற்றிக் கொண்டு கல்லோயா சரணாலயத்திலுள்ள குளத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி பகுதிகளுக்குப் பொறுப்பான வன ஜீவராசிகய் பாதுகாப்பு பொறுப்பதிகாரி ப.ஜெகதீஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.