புலம்பெயர் தமிழர்களை பாதிக்கும் 22 வது திருத்தச் சட்டம் என்பது ஆட்சியில் உள்ளவர்கள் தம்மை ஜனநாயகவாதிகள் எனக் காட்ட எடுத்த ஒரு நாடகம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்த் தேசம் எனப் பேசுகின்ற போது தாயகத்தில் இருக்கின்ற சனத்தொகையுடன், புலம்பெயர் தமிழர்களும் அதன் ஒரு அங்கம் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இரட்டை பிரஜாவுரிமை உடையவர்கள் நாட்டில் முக்கியமான பதவிகளுக்கு வருதை தடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த திருத்தத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், போலி காரணத்தை காட்டி எவ்வித அங்கீகாரமும் இல்லாது, ஆட்சியில் உள்ள கள்ளக் கூட்டத்தால் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம், சுயாதீன ஆணைக் குழுக்களை அமைக்கலாம் என்ற வாக்குறுதிகள் ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படவில்லை என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.