மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உளுந்து, பயறு உள்ளிட்ட மேட்டு நில பயிர் செய்கைக்கான தானியங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேட்டுநில பயிர் செய்கைக்கான தானியங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
இதற்காக 860 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், இன்று முதற்கட்டமாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 40 விவசாயிகளுக்கு மேட்டு நில பயிர் செய்கைக்கான உளுந்து பயறு வழங்கி வைக்கப்பட்டது.
நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.கிறிஸ்கந்த குமார் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மேட்டு நில பயிர் செய்கைக்கான உளுந்து, பயறு போன்ற தானியங்களை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில், மாவட்ட விவசாய பணிப்பாளர் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.