இராணுவத்தினரால் கடந்த 2008/11/01 அன்று படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் செல்லத்துரை புருசோத்தமனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நண்பகல் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதன் பொழுது செல்லத்துரை புருசோத்தமனின் நினைவுருவபடத்திற்கு பல்கலை மாணவர்ளால் ஈகைச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் இடம்பெற்றது.தொடர்சசியாக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சினால் நினைவுரையும் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவரான இவர் மிகவும் இக்கட்டான காலப்பகுதியில் (2006-2007) கலைப்பிட மாணவர் ஒன்றியத் தலைவராகப் பொறுப்பேற்று மாணவர் நலனிலும் பல்கலைக்கழக நலனிலும் அக்கறை கொண்டு செயற்பட்டதுடன் தமிழ்த்தேசிய நலனிலும் பற்றுடையவராகத் திகழ்ந்தார்.
இவர் சமூகவியற் துறையில் 2ம் நிலையில் தேர்ச்சி பெற்று ஆளுமையுள்ள பட்டதாரியாக வெளியேறி குறுகிய காலப்பகுதியில் (01.11.2008)இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.