அரசாங்கம் வடக்கு கிழக்கினை எடுப்பார் கைப்புள்ளைகள் போன்று பார்க்காமல் உடனடியாக இந்த காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கலந்துகொள்ளும் ஊடக சந்திப்பு நேற்று (புதன்கிழமை) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “வடகிழக்கை பொறுத்தவரையில் மாகாண சபை முறைமை தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு ஆரம்ப கட்டமாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் முடிவெடுக்கின்ற நிலையில் மாகாண சபை முறைமை பல வருடங்களில் அமுலாக இருந்தும் வடக்கு கிழக்கு நிர்வாகங்கள் தனியாக செயல்பட்ட நிலையில் தென்னிலங்கை பகுதியில் மக்கள் பிரதிநிதிகளை திட்டமொன்று செயல்படுத்தா வண்ணம் கடந்த காலத்தில் இருந்து வந்தனர்.
இலங்கை அரசாங்கத்தை பொருத்தவரையில் இந்திய அரசாங்கத்தினால் சர்வதேச ரீதியாக சர்வதேச மட்டத்திற்கு மாகாண சபை முறைமை கொண்டுசெல்லப்பட வேண்டும் இலங்கையில் அமல்படுத்தப்பட வேண்டும் வடக்கு கிழக்கில் அமல்படுத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை இந்திய அரசாங்கம் ஒரு வலுவான நிலையில் இன்று ஜ.நா வரையும் கொண்டு சென்றுள்ளது.
இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் சொவிசாய்த்து வடக்கு கிழக்கில் மட்டுமல்ல முழு இலங்கையிலும் மாகாண சபை முறைமையை அமல்படுத்தி வடக்கு கிழக்கில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆரம்ப வடிவமாக மாகாண சபை முறைமை அமல்படுத்தி அதற்கான தேர்தலையும் விரைவாக நடத்தி ஆக்கபூர்வமான செயல்படுவத்தை கொடுக்க வேண்டும்.
வடக்கு கிழக்கில் தற்போது சுமுகமான ஒரு நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கத்தினால் யாழ்குடா நாட்டில் வலிவடக்கு பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை கையகப்படுத்துவதற்கான செயல்படுகத்தை முடக்கி இருக்கின்றது.
இந்த விடயத்தினை கைவிட்டு வடக்கு கிழக்கில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற காணி தொடர்பான செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் காரணம் இலங்கை அரசாங்கத்திற்கு உரிய படைகளுக்கு ஏன் காணிகளை பெறுகின்றார்கள் என எனக்கு தெரியவில்லை.
முப்படைகளுக்கும் வடக்கு கிழக்கில் சுமுகமான நிலை இருக்கின்றபோது வடக்கு கிழக்கில் ஏன் முப்படைகளுக்கான காணி பெறப்பட வேண்டும் ஏன் கையகப்படுத்தப்பட வேண்டும் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கப்பட போகின்றதா? அல்லது இராணுவம் வேறு ஏதும் திட்டமிட்ட செயல்பாடுகளை தொடங்கி இருக்கின்றதா?… அல்லது வடக்கு கிழக்கில் தமிழர் பிரதேசங்களில் பொதுவான காணிகள் இருக்கக் கூடாது என்பதற்கான செயல் வடிவங்களை தொடங்கி இருக்கின்றதா?
மத்திய அரசாங்கம் வடக்கு கிழக்கினை எடுப்பார் கைப்புள்ளைகள் போன்று பார்க்காமல் உடனடியாக இந்த காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை வடகிழக்கில் நிறுத்த வேண்டும்.” என தெரிவித்தார்.