அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றாலும், 2023 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வருமான இலக்குகள் நியாயமற்றவை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று காலை நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், பெறுமதி சேர் வரி உள்ளிட்ட வரிகளை அதிகரிப்பதன் மூலம் உத்தேச வரி வருமான இலக்குகளை அடைய முடியாது என்றார்.
சில துறைகளுக்கு நியாயமற்ற முறையில் வரி விதிக்கப்படுவதாக தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீதான வரியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் சமூக நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் தவறியுள்ளதாக ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பாதுகாப்பு மற்றும் வீதி நிர்மாணத்திற்கான நிதியை அரசாங்கம் அதிகரிப்பதை விமர்சித்த ஹர்ஷ டி சில்வா, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நாடு போராடிக் கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறான அதிகரிப்பு அவசியமா என கேள்வி எழுப்பியுள்ளார்.