கிழக்கு மாகாண பண்டாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கலை இலக்கிய துறைக்காக தொடர்ந்தும் சேவையாற்றிவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளம் கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான நிகழ்வு அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்றது.
இதன் போது நாட்டார் கலைக்காக காத்திரமான பங்களிப்பை வழங்கியமைக்காகவும், பல்வேறு சாதனைகள் புரிந்தமைக்காகவும் மட்டக்களப்பைச் சேர்ந்த அமரசிங்கம் குமணனிற்கு 2020 ஆம் ஆண்டிற்கான நாட்டார் கலை இளங்கலைஞர் எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூற்பரிசுக்கான விருது வழங்கலில் “வரலாற்றுத்துறை சார் இலக்கியத்தில்” – “மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக்கலையும் அதன் வரலாற்றும் பின்னனியும்” எனும் இவரின் நூல் தெரிவுசெய்யப்பட்டதன் அடிப்படையில் இதற்கான மற்றுமொரு விருதினையும் எந்திரி அமரசிங்கம் குமணன் பெற்றக்கொண்டுள்ளதுடன், குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் மருவி வரும் சிலம்பக்கலையை வளர்த்தெடுப்பதற்காக அயராது பாடுபட்டுவருவதுடன், சர்வதேச சிலம்ப சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வரும் பாரம்பரிய சிலம்ப போட்டியில் 2021 மற்றும் 2022 இற்கான போட்டிகளில் ஆயுத வரிசை மற்றும் வெறும் கை வரிசை பிரிவுகளில் இரண்டு வருடங்களிலும் தங்கப்பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன், அதன் பிற்பாடு இவர் சர்வதேச சிலம்ப சம்மேளனத்தின் இலங்கைக்குரிய தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் சிவில் பொறியியல் மற்றும் வணிக நிர்வாக முகாமைத்துவத்தில் முதுமாணி பட்டங்களை பெற்றுள்ளதுடன், தொடர்ச்சியாக மருவி வரும் சிலம்பம், தெற்கன் களரி, வர்மக்கலை, யோகக்கலை மற்றும் பாரம்பரிய விஷ வைத்தியம் ஆகியவற்றை முறையாக கற்றுக்கொண்டுள்ளதுடன் இவ்வாறான கலையம்சங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு அவை தொடர்பாக நூல் உருவாக்கத்தினையும் மேற்கொண்டுவருவதுடன், இவர் மூத்த சிலம்பக்கலை ஆசான்களான ஆ.கணபதிப்பிள்ளை (கருணாநடக வரிசை), யூ.அந்தோனிமுத்து (துடுக்காண்டம் வரிசை), எஸ்.மைக்கல் (குறவஞ்சி வரிசை), கே.சிதம்பரம் (நாகம் பதினாறு வரிசை) ஆகியோரது சிரேஸ்ட மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.