அரசு அலுவலகங்களுக்கு எளிதான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசு அலுவலகங்கள் தவிர, ஏனைய சேவைகளில் ஈடுபடும் நபர்களுக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தாது என அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
சுற்றறிக்கை குறித்து பல தரப்பினரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில், பாடசாலைக்கு வசதியான ஆடைகளை அணிவது குறித்து கல்வி அமைச்சு தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் மாயாதுன்னே கூறியுள்ளார்.
பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையில் அலுவலக ஊழியர்களுக்கு மட்டுமே ஆடை கட்டுப்பாடு பொருந்தும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே, ஏனைய சேவைகளில் ஈடுபடும் நபர்களுக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளின் ஆசிரியர்கள் புடவைக்கு பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து நேற்று பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.