கடந்த காலங்களில் வாக்குறுதிகள் மட்டுமே வழங்கப்பட்டதே தவிர இதுவரை தீர்வு எதுவும் முன்வைக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய எம்.ஏ. சுமந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், கையகப்படுத்தப்பட்ட காணிகள் விடுவிப்பது மற்றும் தமிழர் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் நல்லிணக்கம், மீள்குடியேற்றம், தொடர்பாக ஒருபுறம் பேசிக்கொண்டிருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என குற்றம் சாட்டிய அவர், இந்த விடயம் குறித்து விசாரணை செய்வதாக ஜனாதிபதியின் அறிவிப்பை வரவேறப்பதாக கூறியுள்ளார்.
தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பன தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கொண்டு மக்களின் காணிகளை கைப்பற்றும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி தொடர்ந்தும் தெரிவித்து வருவதை வரவேற்ற சுமந்திரன், நாட்டில் உள்ள அனைத்து மக்களும் திருப்தியடைய கூடிய வகையில் தீர்வு அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.