காலநிலை மாற்றம் என்பது பயங்கரவாதத்தைப் போலவே நவீன உலகிற்கு மிகவும் அச்சுறுத்தலானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
COP27 மாநாட்டின் வெற்றிக்கு மிகப்பெரும் தடையாக இருப்பது அரசியல்மயப்படுத்தலும் காலதாமதமுமே என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
COP27 உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட அறிக்கை :
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மனிதன் – காலநிலை மாற்றம் எனும் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக உலகத் தலைவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக COP கட்டமைப்பின் கீழ் கூடிவருகின்றனர். எனினும், COP செயன்முறையின் கீழ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய உலகளாவிய மற்றும் கூட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் இன்னும் தயாராக இல்லை.
COP 27 இல் எட்டப்பட்ட முடிவுகள் துன்பத்திலிருந்து நாடுகளை விடுவித்து ஒரு முற்போக்கான நிலையில் வைக்க மீண்டும் தவறிவிட்டன. அரசியல்மயமாக்கல் மற்றும் காலதாமதம் ஆகியனவே வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது கவலைலக்குரிய லிடயமாகும். உச்சிமாநாட்டின் இறுதி முடிவு ஊக்கத்தை இழப்பதாக அமைந்துள்ளது.
மிகப்பெரிய சேதத்திற்கு வரலாற்று ரீதியாக பொறுப்புக்கூற வேண்டிய நாடுகள் மற்றும் அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கக்கூடிய நாட்டு தலைமைகள் சமூகமளிக்காமையானது காலநிலை நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது. உலகிலுள்ள தெற்கு நாடுகள் இழப்பு மற்றும் சேதத்துக்காக பகுதி அளவில் வழங்கப்பட்ட நிதியுடன் போராடியபோதும் கடந்த ஆண்டுகளில் G77 நாடுகளின் ஒருமித்த நிலைப்பாடு மற்றும் அழுத்தம் காரணமாக பாரியளவில் சாதித்துள்ளன.
இழப்பு மற்றும் சேதங்கள் நிதி சரியான பாதையில் செல்கின்றபோதும், தேவையான நிதி பங்களிப்புகளை செய்வதற்கு பொறுப்பான நாடுகளை அடையாளம் காண்பதில் ஒரு முக்கியமான புறக்கணிப்பு உள்ளது.
பொறுப்புக்கூறுதல் மற்றும் இழப்பீடுகள் பற்றிய சரத்துக்களை கொண்டதான நிதியை ஸ்தாபிப்பது பற்றிய எவ்வித குறிப்புகளும் இதில் உள்ளடக்கப்படவில்லை. இதன்விளைவாக இதில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து இழப்பு மற்றும் சேதங்கள் நிதி, வினைத்திறனுடன் செயற்படுவதை உறுதி செய்யும் வகையில் G77 நாடுகள்தொடர்ந்தும் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்.
மேலும், இந்த நிதி கடந்தகால நிகழ்வுகளுக்கானது – இது ஏற்பட்ட சேதங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கும். இது காலநிலை மாற்றத்திற்கான மூல காரணங்கள் குறித்து கவனம் செலுத்த மாட்டாது. எனவே தற்போது இடம்பெற்றுவரும் பேரழிவுகளை வரும் முன்னரே தடுப்பதற்காக, 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி எனும் இலக்கை அடைவதனை கருத்திற்கொண்டு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
உலகம் முன்பு கணித்ததைவிட வேகமாக முன்னேறி வருகிறது. எனவே, காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் முயற்சிகள் மேலும் தேக்க நிலையில் இருக்க முடியாது. உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரக்கூடாது என்று கடந்த ஆண்டு உலகமே ஒருமனதாக தீர்மானித்தது. இதற்கான செயற்திட்டமும் முன்வைக்கப்பட்டது. அதற்கான அசல் இலக்கு நடைமுறைப்படுத்தப்படாத போதும் அதனை செயற்படுத்த வேண்டிய விதம் குறித்து COP 27 இல் சமரசம் செய்யப்பட்டது.
மேலும், புதைபடிவ எரிபொருட்களை படிப்படியாக வெளியேற்றுவதிலோ அல்லது உமிழ்வுகள் மீதான புதிய இலக்குகளிலோ உறுதியான உறுதிப்பாடு எதுவும் இல்லை.
இந்த ஒப்பந்தங்கள் துப்பாக்கிச்சூட்டுக் காயத்திற்கு ஒரு எளிய கட்டு. காலநிலை மாற்றம் என்பது பயங்கரவாதத்தைப் போலவே நவீன உலகிற்கு மிகவும் அச்சுறுத்தலானது. உலகத் தலைவர்கள் அக்கறையுடன் இவ்விடயத்தில் ஈடுபடவில்லை என்றால், உலகளாவிய காலநிலை மோசமடைந்து, குடியிருப்புகள் பாதிக்கப்படும்போது அவர்கள் வெறுமனே ஓரத்தில் இருந்து பேச்சு நடத்தியவர்களாக மட்டுமே இருப்பர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள கொப் 28 மற்றொரு தொடக்கப் புள்ளியாக இருக்கக்கூடாது, மாறாக கடந்தகால முடிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பில் ஆராய்வதாக இருக்க வேண்டும்.
காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய செயற்திட்டங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு வருட பணிக்கான ஒப்புதல் முத்திரையாக இது இருக்க வேண்டும் –ஆற்றல் துறைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கும் ஆரம்பமாக வேண்டும்.
மாநாட்டில் பங்கெடுக்கும் தரப்பினருடன் தொடர்புடைய வகையில் COP 28 இல் நிலைபேண்தகு முன்னேற்றம் காணப்பட வேண்டும். இல்லையென்றால் COPஇனை களைப்பதே சிறந்தது. இது மேலும் தொடர தேவையில்லை.