மலையக கல்வி வளர்ச்சிக்காக என்னால் முடிந்த அத்தனை விடயங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பேன். இது விடயத்தில் நான் உறுதியாகவே இருக்கின்றேன். எனவே, இலக்கை அடையும்வரை நிச்சயம் போராடுவேன். – என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னால் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 13ஆவது சிரார்த்த தின மற்றுமொரு நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை)கதிரேசன் ஆலய மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது மேடையில் வைக்கப்பட்டிருந்த அமரர்.பெ.சந்திரசேகரனின் உருவப்படத்திற்கு மலர் மாலையை முன்னணியின் தலைவரும், அமைச்சருமான அரவிந்தகுமாரும், பெ.இராதாகிருஷ்ணனும் அணிவித்தார்கள்.
இதனையடுத்து முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட பொது மக்களும் நினைவுச்சுடர்களை ஏற்றியமையும் குறிப்பிடதக்கது.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் ” மறைந்த தலைவர் அமரர். பெரியசாமி சந்திரசேகரனுடன் 24 மணிநேரமும் இணைந்து பயணித்தவன் நான். அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் எனக்கு அர்த்தம் புரியும். அப்படிபட்ட ஒரு தலைவரின் ஆசியால்தான் எனது அரசியல் பயணம் நீடித்தது. அவரின் ஆசியால்தான் இன்று கல்வி இராஜாங்க அமைச்சு பதவிகூட கிட்டியது என கருதுகின்றேன்.
தற்போதைய அரசியல்வாதிகள் பதவிகளுக்காகவும், அரசாங்க தலைவரை திருப்திபடுத்துவதற்காகவும் ஆமாம் சாமி போட்டு ஜால்ரா அரசியலை முன்னெடுக்கின்றனர்.
ஆனால் அமரர். சந்திரசேகரனின் செயற்பாடுகள் வித்தியாசமானவை. அமைச்சரவையில் இருந்துகொண்டே அரசாங்கத்தை எதிர்த்தவர். அவசரகால சட்டத்துக்கு ஆதரவு வழங்க மறுத்தவர். அதற்கு சார்பாக ஒருநாள் கூட வாக்களித்தது கிடையாது.
பொங்குதமிழ் நிகழ்வில் பங்கேற்பதற்காக வெளிநாடு செல்வார். அவரின் உரை குறித்து இங்குள்ள புலனாய்வுதுறை கழுகுபார்வை செலுத்தும். ஆனாலும் சொல்ல வேண்டிய விடயங்களை பகிரங்கமாக சொல்லிவிடுவார்.
எக்காரணத்தை கொண்டும் பின்வாங்கமாட்டார். உணர்வுடன் செயற்பட்டவர் அவர். அவரின் வழிகாட்டலில் வந்த நான் இன்று கல்வி இராஜாங்க அமைச்சராக இருக்கின்றேன்.
கல்விதான் ஒரு சமூகத்தின் தலையெழுத்தை மாற்றும். அதனை நிச்சயம் செய்வதற்கு முயற்சிப்பேன்.” – என்றார்.