உள்ளூராட்சி சபைத்தேர்தலால் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படப்போவதில்லை. எனவே, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நிதியை மக்கள் நலன்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பொதுச்செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று தேர்தல் ஆணைக்குழுவில் இன்று
( செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ” பல மில்லியன் ரூபாக்களை செலவளித்து உள்ளூராட்சிசபைத் தேர்தலை நடத்துவதால் ஆட்சி மாறப்போவதில்லை. பொருளாதார நெருக்கடியும் தீரப்போவதில்லை. இது தொடர்பில் எனது நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்துள்ளேன்.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டு மக்களுக்கு தேர்தல் குறித்த எண்ணம் இல்லை. அடுத்தவேளை உணவு பற்றிய ஐயப்பாடு பலருக்கும் உள்ளது. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பில் பிரச்சினை உள்ளது. எனவே, மக்களின் நலன்களுக்கே தற்போது முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
நான் தேர்தலுக்கு எதிரானவன் அல்லன். ஆனாலும் தேர்தலை நீதியாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலை இருக்க வேண்டும்.” – என்றார்.