தேரவாத பௌத்தத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கவும் அதனை சர்வதேச மட்டத்தில் வியாபிக்கவும் அவசியமான அனைத்து அரச அனுசரணையையும் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
“சிங்கள தம்மசதகனீப்பகரண” நூல் வெளியீட்டு விழா நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புத்தசாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள திரிபீடகச் சுருக்கத் தொகுப்புப் பேரவையின் 28ஆவது நூலாக ‘சிங்கள தம்மசதகனீப்பகரண’ வெளியிடப்பட்டுள்ளது.
07 நூல்களைக் கொண்ட “அபிதர்ம பிடகத்தின்” முதல் நூல் இதுவாகும்.
இதன் முதற் பிரதியை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஜனாதிபதியிடம் கையளித்தார்.
அத்துடன், ஏற்கனவே வெளியிடப்பட்ட மஜ்ஜிம நிகாய 3, சன்யுக்த நிகாய 1, அங்குத்தர நிகாய 3, குத்தக நிகாய 1, ஜாதக பாலி 1 ஆகிய ஐந்து நூல்களும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.
சிங்கள மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட மேற்படி நூல்களை ஆங்கிலம், ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்வதன் முக்கியத்துவத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறு செய்யப்படும் மொழிபெயர்ப்புகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதன் மூலம் அதன் பயன்பாட்டை அதிகரிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
திரிபீடகச் சுருக்கத் தொகுப்புப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ராஜகீய பண்டித வண. திருகோணமலை ஆனந்த தேரர், வண. மெதஉயங்கொட விஜயகித்தி தேரர், கலாநிதி வண. பலாங்கொட சோபித தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் மற்றும் புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.