நாட்டில் வரிக்கொள்கை, மின்சார கட்டணம் அதிகரிப்பு, வங்கி வட்டி அதிகரிப்பு அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு பல தொழிற்சங்கங்கள் ஒரு நாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதுடன் இன்று நண்பகல் கவன ஈர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்தன.
இந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கம்,இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து இன்று நண்பகல் மட்டக்களப்பு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலளார்கள் நினைவுத்தூபி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நியாயமான வரி திருத்தங்களை தோற்கடிக்க போராடுவோம் என்னும் தொனிப்பொருளிளல் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான பல பதாகைகளுடன் அரசு முன்னெடுக்கப்படும் வரி கொள்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் நிறுத்தப்படாத பட்சத்தில் எதிர்வரும் எட்டாம் திகதியிலிருந்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
இதன்போது இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கறுப்பு உடையணிந்து கறுப்புக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.