வட கொரியாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளன.
மேலும் வட கொரியாவின் முதல் திட எரிபொருள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏவுகணை பாதுகாப்பு பயிற்சிகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகளை மேற்கொள்வது குறித்து மூன்று நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்துரையாடியுள்ளனர்.
வொஷிங்டன், டிசியில் 13வது பாதுகாப்பு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான அணுசக்தி மற்றும் ஏவுகணை பரிசோதனை மற்றும் சட்டவிரோத கடல்வழி நடவடிக்கை உட்பட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை வடகொரியா மீறிவருகின்றது.
உடனடியாக இத்தகைய சீர்குலைக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டால், சர்வதேச சமூகத்தின் வலுவான பதிலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வடகொரியாவுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.