இந்திய ரூபாவை ஏற்றுக் கொள்ளக்கூடிய அந்நிய நாணயமாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவும் இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான பல்வேறுமட்டப் பேச்சுக்கள் நடைபெற்றிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தச் செயற்பாடானது, இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தலைமையிலான நடவடிக்கைகள் மூலம் வலுவான மற்றும் நெருக்கமான கூட்டாண்மையை கட்டியெழுப்ப உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக, இந்திய ரூபாவை பயன்படுத்துவது தொடர்பான கலந்துரைடலில், இலங்கை வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கியின் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
ரிசர்வ் வங்கியின் கட்டமைப்பை உருவாக்கிய பிறகு, அந்தந்த Vostro/Nostro கணக்குகள் மூலம் இந்திய ரூபாவில் குறிப்பிடப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Vostro/Nostro என்றால் லத்தீன் மொழியில் உங்களுடையது என்று பொருள். Vostro/Nostro கணக்கு என்றால், வெளிநாட்டு வங்கி ஒன்றின் பணத்தை உள்நாட்டு வங்கி தன் கணக்கில் வைத்துள்ளது என்பது பொருள்.
அதாவது, உங்களுடைய பணத்தை நாங்கள் வைத்துள்ளோம் என்பதை குறிக்கும் சொல் தான் அதுவாகும்.
பங்குபெறும் வங்கிகள் இந்திய ரூபாவில் குறிப்பிடப்பட்ட தீர்வுகளின் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் இதில் குறுகிய காலக்கெடு, குறைந்த பரிமாற்றச் செலவுகள் மற்றும் வர்த்தகக் கடன்கள் எளிதாகக் கிடைக்கும் என்பதும் இங்கு முக்கிய விடயமாகின்றது.
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இந்த முன்முயற்சியின் நன்மையான தாக்கம் மற்ற துறைகளால் பயன்படுத்தக்கூடிய வசூலை அதிகரிக்க உதவுவதில் அதன் பங்கு உட்பட பல சிறப்புக்கள் காணப்படுவதோடு, வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த நடவடிக்கைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான மற்றும் நெருக்கமான பொருளாதார பங்காளித்துவத்தை கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சிகளில் நேர்மறையான தாக்கங்கள் ஏற்படவுள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா கடந்த ஆண்டு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான உதவிகளை இலங்கைக்கு வழங்கியது.
இந்தக் கடனை வழங்கும்போது இந்தியா நிபந்தனைகளை போடவில்லை என்பது விசேடமானது.
ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ‘இந்திய மற்றும் இலங்கை வணிக சமூகங்கள் மத்தியில் வர்த்தக தீர்வுகளை செயல்படுத்து அவசியம் என்றார்.
அத்துடன், முழு அளவிலான மூலதனம் மற்றும் நடப்புக் கணக்கு பரிவர்த்தனைகளுக்கு இதைப் பயன்படுத்த, இந்த வசதியை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விரிவுபடுத்த வேண்டியுள்ளது’ என்றார்.
இலங்கையானது. 1948இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னரான மிக மோசமான அந்நியச் செலாவணி கையிருப்பு காரணமாக, 2022 இல் இலங்கை நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டது.
இது நாட்டில் அரசியல் கொந்தளிப்பைத் தூண்டியது. இதனையடுத்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான நிலைமைகளை அடுத்தே இந்திய ரூபாவைப் பயன்படுத்தும் தீர்மானத்திற்கு இலங்கை வந்திருந்தது.
அதேநேரம், இந்தியாவைப் பொறுத்தவரையில், தனது நாணய பயன்பாட்டை இலங்கையில் மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. போட்ஸ்வானா, பிஜி, ஜேர்மனி, கயானா, இஸ்ரேல், பிரிட்டன், கென்யா, மலேஷியா, மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர, தான்சானியா, உகாண்டா ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளுக்கு, இந்திய ரூபாவில் வர்த்தகம் மேற்கொள்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.