கிளிநொச்சி மாவட்டம் வலைப்பாடு கிராமத்தில் பாசி வளர்ப்பு செய்கையின் மூலம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்றனர்.
சுமார் 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாசி வளர்ப்பு மற்றும் கூலிக்கு பாசி கட்டிக் கொடுத்து தமது குடும்பத்தின் வறுமையை போக்குகின்றார்கள்.
கணவனால் கைவிடப்பட்ட இந்த பெண்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்விக்காக நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் கடலில் காத்திருந்து, பாசியை கட்டி, அதை கடல் நீரில் ஊற வைத்து அதை காயவைத்து விற்பனை செய்கின்றார்கள்.
இவ்வாறு விற்பனை செய்யும் போது கிடைக்கும் பணத்தை வைத்து தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கின்றார்கள்.
மரைன் அல்கோ என்ற நிறுவனம் பெண் தலைமைத்துவ குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், காய வைத்து கொடுக்கும் பாசியையும் கொள்வனவு செய்கின்றார்கள்.
பாசி வளர்ப்பின் மூலமே, தாங்கள் ஒரு வேளை சாப்பாடு சாப்பிடுவதாக இந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தெரிவிக்கின்றனர்.
சுயதொழில் முயற்சிகளை பல்வேறு தரப்பினர்களும் முன்னெடுத்தாலும், கடலில் பாசி வளர்த்து அவற்றை காய வைத்து விற்பனை செய்வது சவாலான ஒரு தொழில்.
இந்த தொழிலை செய்யும் எமது பெண் தலைமைத்துவ குடும்பங்களின் எதிர்காலம் சிறக்க, உள்நாட்டில் பாசி வளர்ப்பின் மகத்துவத்தையும் அதன் ஊடாக எவ்வாறான வருமானத்தை பெற முடியும் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.