புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுமாறு அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுப்பதாக ஐனாதிபதி செயலக பணிக்குழாமின் தலைவரும் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகரமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச செயலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வறிய மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதோடு பெரும்பாலான இடங்களில் நெல் உற்பத்தியிலும் ஈடுபடுகின்றார்கள் இலங்கை இராணுவத்தினரின் விவசாய திட்டத்தில் பெரும் போக அறுவடையின் பின்னர் தமது செலவுகளினை கழித்து விட்டு மிகுதி நெல்லினை ஏழை மக்களுக்கு வழங்க தயாராக இருப்பதாக இராணுவ தளபதி ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.
அவர்களுடைய விருப்பத்தின்படி அது மக்களுக்கு வழங்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்ட யுத்த அழிவுகளுக்கு பின்னர் நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக வேறு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
அதாவது கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய ஏற்பட்டது. அதேபோல பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களுக்கும் நாங்கள் முகம் கொடுக்க வேண்டி இருந்தது.
அதேபோல பொருட்களைக் கொள்ளவும் செய்ய வரிசைகளில் நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அது வடக்கு கிழக்கு அல்ல தெற்கு மக்கள் என்றல்லாது இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்குமான பிரச்சினையாக காணப்பட்டது.
அந்த நேரத்தில்தான் தற்போதைய ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த நாட்டினை முன்னேற்றுவதற்காக ஐனாதிபதி பதவியினை பொறுப்பேற்றிருந்தார்.
மக்கள் வாழ்வதற்கு முடியாத ஒரு நிலை காணப்பட்டது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதோடு மக்களுக்கான பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாக தீர்க்க நடவடிக்கை எடுத்தார்.
நாங்கள் முன்னோக்க நகர்கின்றோம் ஒரு அடி ஏனும் பின்னோக்கி செல்ல மாட்டோம் என்ற அடிப்படையில் தற்போது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் திட்டத்தில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். இந்த வேலை திட்டத்தில் முழு இலங்கையும் உள்ளடங்கப்பட்டுள்ளது.
வட பகுதியில் விவசாயத்தை நவீன மயப்படுத்தி விவசாயத்தை முன்னேற்றி அதே போல காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்து இ வர்த்தகத்தை ஏற்படுத்திவடபகுதியில் சுபிட்சமான நிலை ஏற்படுத்த நாங்கள் முனைகின்றோம்.
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும்.
புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டுமக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஒத்துழைக்குமாறு தற்போதைய அரசாங்கம் அழைப்பு விடுக்கின்றது.“ எனத் தெரிவித்துள்ளார்.