இலங்கை தற்போது மீண்டெழுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. இந்த முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் 2.9மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு தீர்மானித்ததோடு, அதற்கான முதற்கொடுப்பனவையும் வழங்கியுள்ளது.
சர்வதேச நாயண நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி கிடைத்திருந்தாலும் இலங்கை மீண்டெழுவதற்கு சரியான கொள்கையும், மறுசீரமைப்புக்களும் அவசியமாகின்றன.இலங்கை நெருக்கடிகளிலிருந்து ஒரளவு விடுபட்டிருப்பதற்கு இந்தியா, உள்ளிட்ட நாடுகள் கைகொடுத்து வருகின்றன. ஆனால் இந்த நிலைமை தொடரும் என்று கூற முடியாதுள்ளது.
ஏனெனில் இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கை தனது சர்வதேச கடன்களை மீளச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. கடுமையான வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு காரணமாக, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்கள் உட்பட , வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதாக ஏப்ரல் 12 அன்று இலங்கை அறிவித்தது.
அதன்பின்னர் இலங்கை கடன்களை மீளச் செலுத்தும் செயற்பாட்டில் இறங்கவில்லை. உள்நாட்டிலும் உற்பத்திகள் அதிகரிக்கப்படவில்லை. சுதந்திரமான இறக்குமதிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மக்களின் நுகர்வுத்தேவைகள் கூட மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் உள்ளது. இதனைவிடவும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பையும், வெளிநாட்டக் கடன் மறுசீரமைப்பையும் மேற்கொள்வதில் தொடர்ந்தும் இழுபறியான நிலைமைகள் காணப்படுகின்றன.
குறிப்பாக, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியா, ஜப்பான், பாரிஸ் கழகம் போன்ற ஒரு தளத்திற்கு வந்துள்ள போதும் சீனா இன்னமும் அதற்கான சமிக்கையை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலைமை நீளுவதானது, தொடர்ந்தும் இலங்கைக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக சர்வதேச நாயண நிதியத்தின் நிபந்தனைகளை அமுலாக்குவதில் நெருக்கடிகள் உள்ளன.
சீனாவைப் பொறுத்தவiயில் சீனா இலங்கையில் பல்வேறு கடன்களை வழங்கியுள்ளது. அக்கடன்கள் மூலமாக பாரிய பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் ஊடான உள்நாட்டு வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு கிடைத்திருக்கவில்லை.
2005 மற்றும் 2010க்கு இடைப்பட்ட காலத்தில், இலங்கைக்கான சீன கடனுதவியின் முதல் கட்டம், வழங்கல்களில் விரைவான அதிகரிப்பு என அடையாளம் காண முடிகிறது.
இந்தக் காலகட்டத்தில், சீனா உள்கட்டமைப்பு திட்டத்திற்கான பெரிய அளவிலான வணிக கடன் வழங்குபவராக மாறியது. இந்தக் காலப்பகுதியில் இந்தத் திட்டங்களுக்காக மொத்தம் சுமார் 1.4 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
நுரோச்சோலை நிலக்கரி மின் நிலையம் (1.3 பில்லியன் டொலர்கள்), அம்பாந்தோட்டை துறைமுகம் (372 மில்லியன் டொலர்கள்), மத்தள சர்வதேச விமான நிலையம் (191 மில்லியன் டொலர்கள்) மற்றும் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை (248 மில்லியன் டொலார்கள்). ஆகியனவற்றைச் சுட்டிக் குறிப்பிட முடியும்.
2009 ஆம் ஆண்டு வரை இலங்கை உள்நாட்டு மோதலில் ஈடுபட்டிருந்த நிலையில், 2006-2010 காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடனுக்கான சராசரி பயனுள்ள வட்டி வீதம் 3.1சதவீதம் மட்டுமே காணப்பட்டபோதும் சீனாவின் மேற்படி கடன்களில் சிலவற்றுக்கு 6.5சதவீதமான வட்டியும் அறவிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமைகள் இலங்கையை இலகுவாக கடன்பொறிக்குள் சிக்கவைத்து விட்டது. அதேநேரம், கடன்பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கையை மீட்பதற்காக கைகொடுப்பதற்கு சீனாவும் தயாரில்லாத நிலைமையில் தான் உள்ளது.
இலங்கைக்கு கடன் மறுசீரமைப்புக்கன வாய்ப்பினை வழங்கினால் சீனா இவ்வாறு கடன் வழங்கியுள்ள 14இற்கும் மேற்பட்ட நாடுகளில் மறுசீரமைப்பைச் செய்ய வேண்டி வரும். அவ்விதமான நிலைமையொன்று ஏற்பட்டால் அது சீனாவின் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்திற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏற்கனவே, சீனாவின் உள்நாட்டில் மத்திய அரசாங்கம் பின்பற்றி வருகின்ற பூச்சியக் கொள்கை காரணமாக சில குழப்பான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. அதேநேரம், பங்குச்சந்தை சரிவு, உள்நாட்டு வருவாயில் சிறிய வீழ்ச்சி என்று சீனாவுக்கும் சற்றே எதிர்மறையான நிலைமைகளே காணப்படுகின்றன.
இவ்விதமானதொரு நிலையில் இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு சீனா பாரிய விட்டுக் கொடுப்புக்களைச் செய்யும் என எதிர்பார்க்க முடியாது. அதுமட்டுமன்றி தனது நிதியளிப்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரைக்கோபுரம், உள்ளிட்டவற்றின் நிலைமைகள் தொடர்பில் அது அறிந்திருந்தாலும், அதற்கான கடன்தொகையை மீளப்பெறவே முயற்சிக்கும் இல்லையேல் அவற்றை தம்வசப்படுத்திக் கொள்ளும்.