நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. விமல் வீரவன்சவுக்கு எதிராகக் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாகாத காரணத்தினாலேயே அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.
சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கடந்த 2016 ஆம் ஆண்டு பௌத்தலோக மாவத்தையில் முன்னெடுத்த போராட்டத்தின்போது பிரதான வீதிகளை மறித்து, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, போக்குவரத்துக்கும் இடையூறு விளைவித்ததாகக் கறுவாத்தோட்ட பொலிஸார் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இவ்வழக்கு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ,விமல் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. இதனையடுத்தே அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 11ஆம் திகதிக்கு இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.