2023 ஆம் ஆண்டுக்கான மகளீருக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடர் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.
அதன்படி நேற்றைய தினம் இரண்டு காலிறுதி போட்டிகள் இடம்பெற்றன. அதில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகளும் ஜப்பான் மற்றும் சுவீடன் அணிகளும் பலபரிட்சை நடத்தின.
முதலில் இடம்பெற்ற காலிறுதி போட்டியில் நெதர்லாந்தை 2 -1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றிபெற்றுள்ளது.
81 ஆவது நிமிடத்தில் கிடைத்த பனால்ட்டி வாய்ப்பை பயன்படுத்தி ஸ்பெயின் வீராங்கனை மரியோனா கால்டென்டே ஒரு கோலை புகுத்தினார்.
இதனை தொடர்ந்து 91 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் வீராங்கனை ஸ்டெபானி கிராக்ட் ஒரு கோலை புகுத்த இரு அணிகளும் 1 – 1 என சமநிலை பெற்றது.
வழங்கப்பட்ட மேலதிக நேரத்தை பயன்படுத்திக்கொண்டு 111 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை சல்மா செலஸ்டே ஒரு கோலை புகுத்த ஸ்பெயின் அணியின் வெற்றி உறுதியானது.
இதேவேளை மற்றுமொரு காலிறுதி போட்டியில் 2 – 1 என்ற கோள்கள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணி வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டி ஆரம்பமாகி 32 ஆவது நிமிடத்தில் அமண்டா ஒரு கோலையும் 51 ஆவது நிமிடத்தில் பிலிப்பா ஏஞ்சல்டல் ஒரு கோலையும் புகுத்த சுவீடன் அணி 2-0 என முன்னிலை பெற்றது.
இதனை தொடர்ந்து போராடிய ஜப்பான் அணிக்கு இரண்டாம் பாதியில் 87 ஆவது நிமிடத்தில் ஹொனோகா ஹயாஷி ஒரு கோலை பெற்றுக்கொடுத்த போதும் இறுதியில் சுவீடன் அணி 2-1 என வெற்றிபெற்றது.